எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெரன் பிம்போகட்டுரைகள்

நித்திய வாழ்க்கை

“மரணத்திற்கு பயப்பட வேண்டாம், வின்னி, உயிரற்ற வாழ்க்கைக்கு பயப்படு" என்று அங்கஸ் டக் கூறினார். “டக் எவர்லாஸ்டிங்” என்ற திரைப்படமாக்கப்பட்ட நாவலில் இந்த வசனம், மரணமில்லாத ஒரு கதாப்பாத்திரத்தினால் சொல்லப்படுகிறது. அந்த கதையில், டக் என்பவரின் குடும்பம் அழிவில்லாமையை பெற்றுக்கொள்கின்றனர். அக்குடும்பத்தின் நபரான இளம் ஜேம்ஸ் டக், வின்னியை காதலிக்கிறான். ஆகையால் அவளோடு நித்தியமாய் மகிழ்ந்திருக்கும்பொருட்டு அழிவில்லாமையை தரித்துக்கொள்ளும்படிக்கு அவளிடம் கெஞ்சுகிறான். ஆனால் அங்கஸ் டக் என்பவர், வெறுமையாய் நித்திய வாழ்க்கையை அனுபவிப்பது என்பது எந்த நிறைவையும் நமக்கு தராது என்பதை ஞானமாய் விளக்குகிறார். 

நாம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும், உற்சாகமாகவும் இருந்தால் நாம் நிச்சயமாகவே மகிழ்ச்சியாய் இருக்கமுடியும் என்று நம்முடைய உலக கலாச்சாரம் நமக்கு அறிவிக்கிறது. ஆனால் அதில் நமக்கு நிறைவு கிடையாது. இயேசு சிலுவைக்கு போகுமுன்பு, அவர் தன்னுடைய சீஷர்களுக்காகவும் எதிர்கால விசுவாச சந்ததியினருக்காகவும் ஜெபித்தார். அவர், “ஒன்;றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3) என்று சொன்னார். இயேசுவின் மீதான விசுவாசத்தைக் கொண்டு தேவனிடத்தில் உறவை ஏற்படுத்துவதில் தான் நம்முடைய நிறைவு இருக்கிறது. அவரே நம்முடைய எதிர்கால நம்பிக்கையும், நிகழ்கால மகிழ்ச்சியுமாயிருக்கிறார். 

இயேசு தன்னுடைய சீஷர்கள், புதுவாழ்வின் அடையாளமான, தேவனுக்கு கீழ்ப்படிவது (வச. 6), இயேசு தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை நம்புவது (வச. 8) மற்றும் ஒரே சரீரமாய் இணைந்து செயல்படுவது (வச. 11) போன்று சுபாவங்களை அவர்கள் தரித்துக்கொள்ளும்படிக்கு வேண்டிக்கொண்டார். கிறிஸ்தவர்களாகிய நாமும் கிறிஸ்துவோடு கூட நித்திய வாழ்வை அனுபவிக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆனால் பூமியில் நாம் வாழும் இந்த நாட்களில், அவர் வாக்குப்பண்ணிய பரிபூரணத்தை தற்போது நாம் அனுபவிக்கும் வாழ்க்கையை நாம் அடையமுடியும்.

எப்போதும் நம்பக்கூடியவர்

நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது. 

டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர். 

தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12).

நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23).

எதிர்கால விசுவாசம்

சாரா தன்னுடைய பதினான்காம் வயதில் தன்னுடைய தாயை இழந்தாள். அவளும் அவளுடன் பிறந்தவர்களும், தங்கள் வீட்டை இழந்து நிற்கதியாய் நின்றனர். சில காலங்களுக்கு பிறகு, சாரா தன்னுடைய எதிர்கால சந்ததியருக்கு தலைமுறை தலைமுறையாய் இருக்கும்பொருட்டு சொத்துக்களை சேகரிக்கத் துவங்கினாள். அவள் மிகவும் கடினமாய் பிரயாசப்பட்டு தங்கள் குடும்பத்தினர் தங்கும்பொருட்டு நேர்த்தியான ஒரு சொந்த வீட்டை வாங்கினாள். 

எதிர்கால சந்ததியினருக்காக ஒரு வீட்டில் முதலீடு செய்வது என்பது, நீங்கள் பார்த்திராத எதிர்காலத்திற்கு செய்யும் ஒரு முதலீடாகும். எருசலேம் பாபிலோனியர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பதாக தேவன் எரேமியா தீர்க்கதரிசியை ஒரு நிலத்தை கிரயப்படுத்தும்படிக்கு சொல்லுகிறார் (எரேமியா 32:6-12). தேவன் கொடுத்த இந்த கட்டளை ஏரேமியாவுக்கு சரியானதாகத் தோன்றவில்லை. ஏனென்றால் அனைத்து சொத்துக்களும் எதிரிகளால் விரைவில் கைப்பற்றப்படப் போகிறது. 

ஆனால் தேவன் எரேமியாவுக்கு “நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்” (வச. 42) என்று கர்த்தர் சொன்னார். தீர்க்கதரிசியின் நிலத்தை கிரயப்படுத்தும் இந்த செயலானது, தன் ஜனத்திற்கு தேவன் அவர்களுடைய தேசத்தை மீண்டும் சொந்தமாகக் கொடுப்பதற்கு அடையாளமாக்கப்பட்டுள்ளது. பயங்கரமான அழிவிற்கு பின்னரும், மீண்டும் அவர்களுக்கு இளைப்பாறுதலைக் கொடுப்பதாகவும், சொந்த நிலங்களும் வீடுகளும் வாங்கப்படும் என்றும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 43-44). 

தேவனுடைய வார்த்தையில் நாம் இன்று நம்பிக்கை வைத்து, நம்முடைய விசுவாசத்தில் முதலீடு செய்யத் துவங்கலாம். பூமியில் நம்முடைய சூழ்நிலை எல்லாவகையிலும் மறுசீரமைக்கப்படுதலை நாம் ஒருவேளை சாட்சியிடாமல் இருக்கலாம். ஆனால் தேவன் கோணலான அனைத்தையும் ஒரு நாள் நேராக்குவார் என்று உறுதியாய் நம்பலாம். 

உறுதியான இளைப்பாறுதல் தேவனில்

சீனாவின் புஜியனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் மிகவும் நன்றாகத் தூங்க உதவ விரும்பினர். அவர்கள் ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு சூழலில், சோதனை பொருட்களின் மீதான தூக்க விளைவுகளை அளந்தனர். பிரகாசமான, மருத்துவமனை தர விளக்குகள் மற்றும் இயந்திரங்களின் சத்தங்கள் மற்றும் செவிலியர்கள் பேசும் ஆடியோ பதிவுகளுடன் முழுமையான சோதனை அது. தூக்கக் கவசங்கள் மற்றும் காது செருகிகள் போன்ற கருவிகள் சோதனை பொருட்களின் ஓய்வை மேம்படுத்துவதாக அவர்களின் ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் உண்மையான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள உண்மையிலேயே நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, அமைதியான தூக்கம் இன்னும் கடினமாக இருக்கும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

நம் உலகம் நிலைகுலைகையில், நாம் எப்படி ஓய்வெடுப்பது? வேதம் தெளிவாகக் கூறுகிறது: தேவனை நம்புபவர்களுக்கு அவர்களின் சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட சமாதானம் இருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசி, பூர்வ இஸ்ரவேலர்ககளின் துன்பங்களுக்குப் பிறகு மீட்கப்படும் எதிர்காலத்தைப் பற்றி எழுதினார். அவர்கள் தங்கள் பட்டணத்தில் பாதுகாப்பாக வாழ்வார்கள், ஏனென்றால் அதைக் தேவன் காப்பாற்றினார் என்பதை அறிந்திருந்தார்கள் (ஏசாயா 26:1). அவர்களைச் சுற்றியுள்ள சூழலில் நன்மையைக் கொண்டுவர அவர் ஆற்றலுடன் இயங்குவதை அவர்கள் நம்புவார்கள். "அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்”, ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துகிறார், நீதியைக் கொண்டுவருகிறார் (வவ. 5-6). "கர்த்தர்தாமே நித்தியமான கன்மலை" என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்கள் அவரை என்றென்றும் நம்பலாம் (வ. 4).

ஏசாயா எழுதினார்: “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” (வச. 3). இன்றும் தேவன் நமக்கு அமைதியையும் இளைப்பாறுதலையும் வழங்க முடியும். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அவருடைய அன்பு மற்றும் வல்லமையின் உறுதியில் நாம் இளைப்பாறலாம்.

தகுதியற்ற பரிசு

சமீபத்தில் என் தோழி எனக்குப் பரிசளித்தபோது, ​​நான் ஆச்சரியப்பட்டேன். அவளிடமிருந்து இவ்வளவு நேர்த்தியான பரிசுக்கு நான் தகுதியானவள் என்று நான் நினைக்கவில்லை. நான் அனுபவிக்கும் சில பணிச்சுமைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு அவள் அதை அனுப்பினாள். ஆனாலும், வயதான பெற்றோர், மாற்றுத்திறனாளி குழந்தைகள், வேலையில் பாரம், திருமண உறவில் நெருக்கடிகள் என என்னை விட அதிக மன அழுத்தத்தை அவள் அனுபவித்தாள். அவள் தன்னை காட்டிலும் என்னைப் பற்றி நினைத்தாள் என்று என்னால் நம்ப முடியவில்லை, அவளுடைய எளிய பரிசு கண்ணீரை வரவழைத்தது.

உண்மையில், நாம் அனைவரும் தகுதியற்றவர்களாகவே ஒரு பரிசைப் பெற்றவர்கள். பவுல் அதை இவ்வாறு சொல்கிறார், "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்... அவர்களில் பிரதான பாவி நான்" (1 தீமோத்தேயு 1:15 ). ஒரு காலத்தில் அவர், " தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்(தார்).. கர்த்தரின் கிருபை கிறிஸ்து..பெருகிற்று (வ. 13–14). உயிர்த்த இயேசு, கிருபையின் இலவச பரிசைப் பற்றிய ஆழமான புரிதலை பவுலுக்கு வழங்கினார். இதன் விளைவாக, அந்தப் பரிசைப் பெறுவதற்குத் தகுதியற்றவராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை அவர் கற்றுக்கொண்டார், அவர் தேவனுடைய அன்பின் வல்லமையான கருவியானார், மேலும் தேவன் அவருக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி பலரிடம் கூறினார்.

தேவனின் கிருபையால் மட்டுமே நாம் ஆக்கினைக்குப் பதிலாக அன்பையும், நியாய தீர்ப்புக்குப் பதிலாக இரக்கத்தையும் பெறுகிறோம். இன்று, தேவன் அருளிய தகுதிக்கு மேலான கிருபையைக் கொண்டாடுவோம், மற்றவர்களுக்கு அந்த கிருபையை வெளிப்படுத்துவதற்கான வழிகளைத் தேடுவோம்.

திருப்தியாயிரு

டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் கொடூரமான படுகொலை 1960களில் அமெரிக்க சட்ட உரிமைகள் இயக்கத்தின் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டு சரியாய் நான்கு நாட்கள் கழித்து, விதவையாக்கப்பட்ட அவருடைய மனைவி கொரேட்டா ஸ்காட் கிங் தன்னுடைய கணவருடைய ஸ்தானத்தில் நின்று ஒரு அமைதியான எதிர்ப்பு அணிவகுப்பை நடத்தினார். கொரேட்டா நீதியை நிலைநாட்டுவதில் பேரார்வம் கொண்டிருந்தார். பல விஷயங்களில் சாதனையாளராகவும் திகழ்ந்தார். 

இயேசு, “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத்தேயு 5:6) என்று சொல்லுகிறார். தேவன் ஒரு நாள் பூமியில் வந்து அநீதிகளை தகர்த்து நீதியை நிலைப்படுத்துவார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதுவரை கொரேட்டாவைப் போன்று கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி பூமியில் நீதியை நிலைப்படுத்த முயற்சிப்போம். ஏசாயா 58 ஆம் அதிகாரம், தேவன் தன் ஜனங்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார் என்பதை பட்டியலிடுகிறது: “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும்.. நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும்.. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்” (வச. 6-7). ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காய் பிரயாசப்படுவது நம்முடைய தேவபக்தியை வெளிப்படுத்துகிற ஒரு விதம். ஏசாயா, தேவ ஜனம் நீதியைத் தேடுவதை விடியற்கால வெளிச்சத்துடன் ஒப்பிட்டு, அது சுகவாழ்வை கொண்டுவரும் என்று கூறுகிறார் (வச. 8). 

இன்று தேவன், அவருடைய நீதியைக் குறித்த நம்முடைய பசிதாகத்தை பிரதிபலிக்க உதவிசெய்வாராக. அவருடைய வழியில் நாம் நீதியை தேடும்போது, அதில் நாம் திருப்தியடைவோம் என்று வேதம் சொல்லுகிறது. 

சுமையைக் குறையுங்கள்

நாங்கள் புதிதாய் ஆரம்பித்த வேதாகம வகுப்பிற்கு வந்த ஒரு சகோதரி தொடர்ச்சியான துயரங்களைச் சந்திக்கையில், நாங்கள் எங்கள் தனிப்பட்ட அனுபவங்களை எங்களை அறியாமலேயே பகிர்ந்துகொள்ளத் துவங்கினோம். தந்தையின் மரணம், விவாகரத்திற்குப் பின் வந்த திருமண நாள் நினைவுகள், செவிடாய்ப் பிறந்த குழந்தை, அவசர சிகிச்சைப் பிரிவில் பிள்ளையின் போராட்டம் என தனியாக சுமக்கக் கூடாததாகிய பாரங்களை, ஒவ்வொருவரும் எவ்வளவாய் பாதிக்கப்பட்டோமோ, அவ்வளவாய் வெளிப்படையாய்ப் பேசினோம். ஒன்றாய் நாங்கள் அழுதோம், ஜெபித்தோம். அந்நியர்களாய் அறிமுகமான அந்தக் குழு,  சிலவாரங்களிலேயே நெருங்கிய நண்பர்களின் குழுவாய் மாறியது.

இன்றும் சபையென்னும் சரீரத்தின் அங்கமான விசுவாசிகள், மற்றவர்களின் துயரங்களினூடே அவர்களுக்கு ஆழமாகவும், நெருக்கமாகவும் உதவ முடியும். கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகள் எனும் உறவில் இணைய நீண்டகால பழக்கமோ, கருத்து ஒற்றுமையோ தேவையில்லை.

மாறாக, பவுலின் அழைப்பின்படி நாம் , "ஒருவர் பாரத்தை ஒருவர் (சுமக்கிறோம்)" (கலாத்தியர் 6:2). தேவனின் பெலனைச் சார்ந்துகொண்டு நாம் கவனித்துக் கேட்கிறோம், பரிதவிக்கிறோம், இயன்ற உதவியைச் செய்கிறோம், ஜெபிக்கிறோம். மேலும் நாம் "யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை(செய்ய)" (வ.10) வாய்ப்புகளை நாடலாம். நாம் அவ்வாறு செய்கையில் “தேவனிடத்திலும் பிறரிடத்திலும் அன்புகூருதல்” என்னும் கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதாக (வ.2) பவுல் கூறுகிறார். வாழ்வின் சுமைகள் பாரமானவை தான், ஆனால் அந்தச் சுமையைக் குறைக்கவே தேவன் நமக்குச் சபையென்னும் குடும்பத்தை அளித்துள்ளார்.

இரக்கத்தை தெரிந்தெடுத்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், பனிக்கட்டிகளால் ஏற்படும் துர்ச்சம்பவங்களை நகைச்சுவைக்காக ஒளிபரப்பும் 5 நிமிட நிகழ்ச்சி மிக முக்கியமானதாய் கருதப்பட்டது. அதில் தங்கள் வீடுகள் மேலிருக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் மக்கள், வீட்டுக் கூரையின் மேல் ஏறுவதும், வழுக்கி விழுவதுமான காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய் இடம்பெறும். அந்த நிகழ்வு காண்போருக்குச் சிரிப்பை வரவழைத்தது. மக்கள் தங்களுடைய மதியீனமான செய்கைகளை அதில் வெளிப்படுத்தியபோது, சிரிப்பு சத்தம் அதிகமாகியது.
இதுபோன்ற நகைச்சுவையான வீட்டுச் சம்பவங்களின் காணொலிகளைப் பார்ப்பது தவறல்ல. ஆனால் அது மற்றவர்களுடைய வேதனையிலும் வலியிலும் வேதனைப்படுகிறவர்களாய் அல்லாமல், நம்மைச் சிரிக்கக்கூடியவர்களாய் மாற்றிவிடுகிறது. இஸ்ரவேல் மற்றும் ஏதோம் ஆகிய இரு தேசங்களுக்கு இடையே நிகழ்ந்த அப்படியொரு சம்பவம் ஒபதியா புத்தகத்தில் பதிவாகியுள்ளது. தேவன் இஸ்ரவேலை தண்டிக்கும்போது, அதைக் கண்டு ஏதோம் மகிழ்ந்திருந்தது. அவர்கள் அதைச் சாதகமாய் பயன்படுத்திக்கொண்டு இஸ்ரவேல் தேசத்தை சூறையாடி, அவர்களை தப்பவிடாமல் காட்டிக்கொடுத்து, அவர்களின் எதிரி தேசங்களுக்கு ஆதரவாய் செயல்பட்டனர் (ஒபதியா 1:13-14). “உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும்... இருக்கவேண்டியதாயிருந்தது. எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது” (வச.12,15) என்று ஏதோமுக்கு விரோதமான எச்சரிப்பு செய்தியை ஒபதியா அறிவிக்கிறார்.
மற்றவர்கள் வேதனை அனுபவிக்கும்போது, அது அவர்களுடைய செய்கைக்கு உகந்தது என்று தோன்றினாலும், நம்முடைய இறுமாப்புக்குப் பதிலாய் இரக்கத்தையே நாம் தேர்வுசெய்யவேண்டும். மற்றவர்களை நியாயந்தீர்க்கும் அதிகாரம் நமக்கில்லை. தேவனே அதைச் செய்ய முடியும். இவ்வுலக ராஜ்யம் அவருக்குச் சொந்தமானது (வச.21). இரக்கம் மற்றும் நீதி செய்யும் அதிகாரம் அவருக்கே உரியது.

தேவனிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்தல்

சமையலறை மேடையில் பொருந்தக்கூடிய அளவிற்கு ஒரு ஆலமரத்தை கற்பனை செய்து பாருங்கள். போன்சாய் என்ற மரம் அப்படித்தான், காட்டில் நீங்கள் பார்க்கும் பெரிய ஆலமரத்தின் மிகச்சிறிய உருவமே இந்த போன்சாய் மரம். பெரிய மரத்திற்கும் இந்த போன்சாய் மரத்திற்கும் இடையே எந்த மரபணு வித்தியாசமும் கிடையாது. அதை நட்டு வைத்திருக்கிற தொட்டியின் அளவினாலும், அதின் வேர் அடிக்கடி  சுத்திகரிக்கப்படுவதினாலும் அதின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு சிறியதாகவே இருக்கிறது.

இந்த போன்சாய் மரங்கள் அழகாய் அலங்காரமாய் தெரிந்தாலும், அது கட்டுப்பாட்டை உருவகப்படுத்துகிறது. மரங்கள் அதின் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்தாலும், அவற்றை வளரச் செய்வது தேவனே.

தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியிடத்தில், “கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன்” (எசேக்கியேல் 17:24) என்று பேசுகிறார். பாபிலோனிய சிறையிருப்பை அனுமதிப்பதின் மூலம் இஸ்ரவேல் தேசத்தை “வேறோடு பிடுங்கும்” எதிர்காலத்தைக் குறித்து தேவன் முன்னறிவிக்கிறார். ஆகிலும் தேவன் இஸ்ரவேலில் கனி தரக்கூடிய ஒரு புதிய விருட்சத்தை ஓங்கி வளரச்செய்வார்; அதின் நிழலில் “சகலவிதப்பட்சி ஜாதிகளும்” வந்து அடைக்கலம் தேடும் (வச. 23).

சம்பவிக்கப்போகிற நிகழ்வுகள் அனைத்தும் கட்டுப்பாட்டை மீறியதாக தென்பட்டாலும், தேவன் அதை கட்டுக்குள் வைத்திருந்தார். இந்த உலகம், நம்முடைய சூழ்நிலைகளால், கடின உழைப்பின் மூலம் நாமே கட்டுப்படுத்த முடியும் என சொல்லுகிறது. ஆனால் வளரச்செய்யும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போதே, மெய்யான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.